கிரேஷ் டெஸ்ட்டில் மீண்டும் கோட்டை விட்ட க்விட்!

தரக்கட்டுப்பாடு சோதனை அமைப்பான குளோபல் என்கேப் நான்காவது கிரேஷ் டெஸ்ட் சோதனைகளை மேற்கொண்டுள்ளது. இந்த சோதனையில் க்விட் மற்றும் மொபிலியோ போன்ற மாடல்களும் அடங்கும்.

க்விட்:

You may also like this : க்விட் 1.0 டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இந்த ஆண்டின் சிறந்த கார் என்ற அந்தஸ்தை பெற்றிருக்கும் க்விட் கடந்த மே மாதம் நடந்த என்கேப் குளோபல் டெஸ்டில் பூஜியத்தை பெற்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த டெஸ்டில் ஏர்பேக் மற்றும் ஏர்பேக் இல்லாத மாடல்கள் சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. சோதனை முடிவில் க்விட், பெரியவர்களுக்கான பாதுகாப்பில் பூஜியத்தையும் குழந்தைகளுக்கு 2 நட்சத்திர மதிப்பீட்டையும் பெற்றது.

இந்த முறை முன்புற பாதிப்புகளை சோதிக்க நிகழ்த்தப்பட்ட சோதனையிலும் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் ஒரே ஒரு நட்சத்திர மதிப்பீட்டை மட்டுமே பெற்றுள்ளது. இந்த முறை ஏர்பேக் மற்றும் சீட் பெல்ட் ப்ரீடென்ஸ்னர் போன்ற பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய மாடல்தான் சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.மேலும் சோதனை முடிவுகளின் ஓட்டுனரின் மார்பு பகுதிகள் அதிக பாதிப்புக்குள்ளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒரு நட்சத்திர தரத்திலான கார்களை தேர்வு வேரியன்டாக விற்பதற்கு பதிலாக ஸ்டாண்டார்டு வேரியண்டாக விற்கலாம் எனவும் பாதுகாப்பு வசதிகள் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும் எனவும் குளோபல் என்கேப் அறிவுறுத்தியுள்ளது.

honda-mobilio-crash-test

ஹோண்டா மொபிலியோ:

சிறந்த கட்டுமானத்தரத்தை கொண்ட ஹோண்டா மொபிலியோவும் சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ஏர்பேக் கொடுக்கப்படாததால் பெரியவர்களுக்கான மதிப்பீட்டில் பூஜியத்தை பெற்றது.

இக்குறையை போக்கும் விதமாக ஹோண்டா நிறுவனம் மீண்டும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தற்போது ட்யுவல் ஏர்பேக் கொண்ட மாடல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்தமுறை மூன்று நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது.

ஹோண்டா மற்றும் ரெனோ நிறுவனங்கள் மற்ற நாடுகளில் மிகப்பாதுகாப்பான  வசதிகளுடன் வாகனங்களை தயாரித்து வரும் நிலையில் இந்தியாவில் மட்டும் விலையை காரணம் காட்டி பாதுகாப்பு வசதிகளில் சமரசம் செய்து கொள்கின்றன. பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வரும் நிலையில் தற்போது இந்திய அரசும் பாரத் என்கேப் மூலம் கடுமையான விதிமுறைகள் கொண்டுவர வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.