ரெனோ க்விட் 1.0 டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

நடுத்தர வர்க்கத்தின் கார் வாங்கும் கனவை நனவாக்கியதில் ஆல்டோவிற்கு அடுத்த இடம் ரெனோ க்விட்டையே சேரும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 1.௦ அறிமுகம் செய்யபட்டுவிட்டது, புதிய பெரிய இஞ்சின் எந்த அளவிற்கு கை கொடுக்கும் என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்திய மக்களின் மாறிவரும் விருப்பங்களை அறிந்து கொண்ட ரெனோ, மினி எஸ்யுவி களத்தை தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் பெற்று விட்டது. முரட்டுத்தனமான மற்றும் எஸ்யுவி போன்ற தோற்றம் வாடிக்கையாளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்த அதே நேரத்தில் 800சிசி என்ஜின் மட்டுமே குறையாக இருந்தது. தற்போது அந்த குறையையும் போக்கிவிட்டது ரெனோ க்விட்.

க்விட் 1.௦ பெரிதாக எந்த குறையும் சொல்ல முடியாத அளவிற்கு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வசதிகள் அப்படியே தொடர்வது மட்டுமே யோசிக்க வேண்டிய விஷயம். OMF-A பிளாட்ஃபார்மில் தயாரிக்கபட்ட க்விட் 1.௦, முழு அளவில் உள் நாட்டிலேயே தயாரிக்கப்படுவதால் இதன் விலை 4 லட்சத்தை மட்டுமே நெருங்குகிறது.

பெரிய வித்தியாசம் ஏதும் இல்லாமல் வெளிப்புற ரிவர்வ்யு கண்ணாடிகள் இரட்டை வண்ணக் கலவையில் கொடுக்கப்பட்டுள்ளன. அதே சமயம் கதவுகளில் 1.௦ பெரிய எழுத்துகளில் பாடி கிராபிக்ஸ் போன்று கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், நாம் எதிர்பார்த்ததை போல பின்புறம் 1.௦ பேட்ஜ் ஓட்டப்படவில்லை.

குறிப்பிட்டு சொல்லக் கூடிய அம்சம் புதிய மேம்படுத்தப்பட்ட என்ஜின் மட்டுமே இப்புதிய 1.௦ எஸ்சிஇ பெட்ரோல் என்ஜின், பவர் மற்றும் ஸ்ட்ரோக் 999சிசி என்ஜினுக்கு ஏற்ப மேம்படுத்தட்டுள்ளது. ஆகவே DHOC கட்டமைப்பு கொண்ட 4 வால்வுகள் சீரான பவரை வழங்க உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

kwid-engine

இப்புதிய என்ஜின், 800சிசி எஞ்ஜினை விட 14பிஎஸ் அதிகமாகவும் உட்சபட்சமாக 68பிஎஸ் பவரையும் வழங்குகின்றது. மேலும் எடையும் 40கி கூடியுள்ளதால் க்விட் 1.௦ தற்போது 699கி எடையை நெருங்குகிறது.800சிசி எஞ்ஜினை போலல்லாமல் உடனடியாக செயல்திறனை குறைவான வேகத்திலும் தருகிறது. மேலும், சப்தம் குறைவாக இருந்தபோதும் 3 சிலிண்டர் எஞ்ஜினை போன்ற உணர்வையும் ஏற்படுத்துவது உண்மை.

கியர்பாக்ஸ் அமைப்பும் சற்று மேம்படுத்தப்பட்டுள்ளது குறிப்பாக முதல் மற்றும் இரண்டாவது கியர்களின் செயல்பாடுகள் மற்றும் சிறந்த டார்க்கை அளிக்கும் வகையில் டிரைவ் சாப்ட்கள் போன்றவை ரெனோ என்ஜினியர்களால் சிறப்பாக உருவாக்கப்பட்டு உள்ளது.

சஸ்பென்சன்களை பொருத்தவரை எந்த ஒரு மாற்றமும் இல்லை. மேலும் 180மிமி கிரவுண்ட் கிளியரன்ஸ் மேடு பள்ளங்களில் நிச்சயம் கைகொடுக்கும். கிளச் பெடல்கள் இலகுவாக அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால் ரிலிஸ் ஆகும் போது ஆக்சிலேட்டரை விரைவாக அழுத்த வேண்டிய உணர்வு வருகிறது.

டிரைவீங் டைனமிக் மற்றும் கையாளுமை போன்றவற்றில் பெரிய மாற்றங்கள் இல்லை எனவே வளைவுகளை எளிதாக கடக்க முடிகிறது. ஆனால் சிறிது பாடி ரோல் ஆவதை உணர முடிகிறது. ABS வசதியும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ப்ரேக் ஸிஸ்டம் பெரிய மாற்றம் ஏதும் இல்லாமல் முன்புறம் டிஸ்க்கும் பின்புறம் ட்ரமும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ABS வசதி இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும்.

kwid-interior

உட்புறம் அதே பியானோ ப்ளாக் மற்றும் குரோம் லைன்கள் தொடர்கிறது. மேலும் கூடுதலாக இடவசதிக்காக க்ளவ் பாக்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளதும் சிறப்பம்சம். நீளம் 3,680மிமி ஆக இருந்த போதும் பின்புற இருக்கையில் கால்கள் இடிப்பதில்லை என்பதும் சிறப்பான ஹெட்ரூம் மற்றும் செக்மண்டிலேயே அதிகமான இடவசதியை கொண்ட 300 லிட்டர் பூட்ரூம் ஆகியவை க்விட்டின் விற்பனையை உயர்த்தி பிடிக்கின்றன.

டாப் வேரியண்டான RXT ல் மட்டும் ஓட்டுநர் பக்க ஏர்பேக் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு சாதனகளுக்கு வாடிக்கையாளர்கள் பெரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும் வரப்போகும் பாதுகாப்பு சட்ட விதிகளின்படி விரைவில் அனைத்து வாகனங்களுக்கும் பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று நம்பலாம்.

க்விட் 800சிசி, 2.7 லட்சம் முதல் 3.8 லட்சம் ( எக்ஸ் – ஷோரூம் ) விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய க்விட் ஆர்எக்ஸ்டி (RXT) மற்றும் ஆர்எக்ஸ்டி ஆப்ஷ்னல் (RXT optional) மாடல்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ஆர்எக்ஸ்டி (RXT) 3.83 லட்சம் விலையிலும், ஆர்எக்ஸ்டி ஆப்ஷ்னல் (RXT optional) 3.96 லட்சம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

கடந்த மாதம் க்விட் 9,800 யூனிட்டுகள் விற்று ஆறாவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் மாருதி ஆல்டோவின் விற்பனை 11% குறைந்து இருப்பது கவனிக்கத்தக்கது.