விற்பனையில் டாப் 10 கார் நிறுவனங்கள்… எட்ட முடியாத உயரத்தில் மாருதி!
எப்போதும் போலவே சென்ற மாதமும் மாருதி இமாலய விற்பனையை பதிவு செய்து முடிசூடா மன்னனாக வலம் வருகிறது. பட்ஜெட் கார் என்ற தோற்றமும் பரந்து விரிந்த சர்வீஸ் நெட்வொர்க்கும் மாருதியின் விற்பனையை உயர்த்திப்பிடிக்கின்றன.
10. வோல்க்ஸ்வேகன்
ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான வோல்க்ஸ்வேகன் சென்ற மாதம் 4,447 கார்களை விற்பனை செய்துள்ளது. இது 6 சதவீத உயர்வாகும். மேலும் இந்நிறுவனம் போலோ ஜிடீஐ, டைகன் போன்ற மடல்களை அறிமுகப்படுத்த உள்ளது, இந்த மாடல்கள் வெற்றி அடையும் பட்சத்தில் இந்நிறுவனத்தின் விற்பனை கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
9. நிசான் இந்தியா
நிசான் இந்தியா 5,918 கார்களை விற்பனை செய்து ஒன்பதாவது இடத்தில் உள்ளது. மேலும் மொத்த விற்பனையில் 111 சதவீத வளர்ச்சியை பெற்று முன்னேற்றம் அடைந்துள்ளது.
8. ஃபோர்டு
ஃபோர்டு இந்தியா நிறுவனம் சென்ற மாதம் 8,548 கார்களை விற்றுள்ளது. ஆனால் மொத்த விற்பனையில் 2.5 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
7. டோயோட்டோ கிர்லோஸ்கர்
டோயோட்டோ கடந்த மாதம் 12,801 யூனிட்டுகளை விற்றுள்ளது. மொத்த விற்பனையில் 15 சதவீத உயர்வை பதிவு செய்து ஏழாவது இடத்தில் உள்ளது.
6. ரெனோ இந்தியா
சென்ற மாதம் க்விட் 1.௦ மாடலை அறிமுகப்படுத்தியதின் மூலம் கவனத்தை ஈர்த்துள்ளது. என்ட்ரி லெவல் ஹேட்ச் செக்மன்ட்டில் மாருதியின் மிகப்பெரிய போட்டியாளராக உருவெடுத்துள்ளது. கடந்த மாதம் 12,927 யூனிட்டுகளை விற்பனை செய்து அசத்தியுள்ளது.மேலும் இந்நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி வீதம் சாதனை அளவாக 221 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
5. டாடா மோட்டார்ஸ்
சீரான வளர்ச்சியை பெற்று வரும் டாடா நிறுவனம் கடந்த மாதம் 13,002 யூனிட்டுகளையும் மொத்த விற்பனையில் 16 சதவீத வளர்ச்சியையும் அடைந்துள்ளது. இந்நிறுவனம் டியாகோ மாடலை அறிமுகப்படுத்தியதில் இருந்து சிறப்பான விற்பனையை பதிவு செய்து வருகிறது.
4. ஹோண்டா
இந்திய வாகன சந்தை வெகு வேகமாக வளர்ந்து வரும் நிலையில் ஹோண்டா நிறுவனம் எதிர்மறை வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. கடந்த சில மாதங்களாகவே இந்நிறுவனத்தின் விற்பனையில் சுணக்கம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. சென்ற மாதம் விற்பனை -10 சதவீதம் குறைந்து 13,941 யூனிட்டுகளாக உள்ளது. இச்சூழ்நிலையை சரிக்கட்டும் நோக்கில் புதிய மாடல்களை களமிறக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
3. மஹிந்திரா அண்ட் மஹிந்திரா
உள்நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா, எஸ்யூவி விற்பனையில் முன்னனியில் உள்ளதால் நல்ல விற்பனையை பெற்று வருகிறது. மேலும் இந்தியாவில் எஸ்யூவி செக்மன்ட் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்ற மாதம் 18,246 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. அதேபோல் மொத்த விற்பனையும் 29 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.
2. ஹியூண்டாய் மோட்டார்ஸ்
நாட்டின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹியூண்டாய் சென்ற மாதம் 43,201 யூனிட்டுகளை விற்றுள்ளது. மொத்த விற்பனை வளர்ச்சி வீதம் 6.2 சதவீதமாக உள்ளது. மேலும் தொடர்ந்து புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி வருவது இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐந்தாம் தலைமுறை எலாண்ட்ரா நல்ல வரவேற்ப்பை பெற்றிருப்பது வரும் மாதங்களில் விற்பனையை இன்னும் அதிகரிக்கும் என்று நம்பலாம்.
1. மாருதி
மாருதி நிறுவனம் இந்திய வாகனச் சந்தையில் 50 சதவீததிற்க்கும் மேற்பட்ட வர்த்தகத்தை வைத்துள்ளது. கடந்த மாதம் இந்தியாவில் மொத்தம் விற்பனையான 2.53 லட்சம் யூனிட்டுகளில் மாருதி நிறுவனத்தின் பங்கு மட்டுமே 1,19,931 யூனிட்டுகளாக உள்ளது.
மேலும் மொத்த விற்பனை வளர்ச்சி வீதம் கடந்த ஆண்டுடன் ஒப்பீடும் போது 12.2 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
