ஆகஸ்ட் மாத டாப் 10 : இருசக்கர வாகனங்கள்

மோட்டார்சைக்கிள், மொபட் மற்றும் ஸ்கூட்டர்கள் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய மார்க்கெட்டிற்கு இந்த ஆண்டு சிறப்பான வருடம். மொத்த இருசக்கர வாகன விற்பனை கடந்த ஆண்டுடன் ஓப்பிடும் போது 26.32 சதவிகித உயர்வை பதிவு செய்துள்ளது. அதே போல் மோட்டார் சைக்கிள் விற்பனை 22.19 சதவிகிதம் (1,005,666 யூனிட்டுகள்), ஸ்கூட்டர்கள் விற்பனை 33 சதவிகித உயர்வுடன் (567,782 யூனிட்டுகள்) மற்றும் மொபட் விற்பனை அதிகபட்சமாக 36 சதவிகித (75,435 யூனிட்டுகளை) பதிவுசெய்துள்ளது.

10. CT 100 : பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பும் CT 100 பத்தாவது இடத்தில் உள்ளது மொத்தம் 44,599 யூனிட்டுகளை விற்று உள்ளது. கடந்த ஆண்டு 38,412 யூனிட்டுகளாக இருந்தது. இதன் மூலம் 16.11 சதவிகித உயர்வை பெற்றுள்ளது.

9. பல்ஸர் : பஜாஜ் நிறுவனத்தின் மிகச்சிறந்த மாடல் 48,910 யூனிட்டுகளை விற்றுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதம் (2015 : 52,193 யூனிட்டுகளாக இருந்தது குறிப்பிடதக்கது. இது 6.29 சதவிகிதம் விற்பனை குறைந்துள்ளதை காட்டுகிறது.

8. டிவிஎஸ் ஜூபிடர்  :  எட்டாவது இடத்தில் டிவிஸ் ஜூபிடர் பெற்றுள்ளது. மொத்தம் 51,728 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது கடந்த ஆண்டுடன் ஒப்பீடும் போது ( 46,614) 10.97 சதவிகிதம் விற்பனை உயர்ந்துள்ளது.

7. ஹோண்டா சிபி சைன் : ஏழாவது இடத்தில் ஹோண்டா சிபி சைன் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 63,606 யூனிட்டுகள் விற்பனை ஆகியுள்ளது இது 15.37 சதவிகித உயர்வாகும். அதே சமயம் இம்மாடலின் பங்காளியான கிளாமரின் வருடந்திர விற்பனை உயர்வு இருமடங்காக உயர்ந்துள்ளது. இந்நிலையில் புதிய சிபி சைன் ஸ்பி மாடல் கிட்டத்தட்ட 10,0000 யூனிட்டுகள் முன்பதிவு பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும் ஹோண்டா ஸ்கூடர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

6. கிளாமர் : ஹீரோவின் 125சிசி பெஸ்ட் செல்லரான கிளாமர் ஆறாவது இடத்தில் உள்ளது. மொத்தம் 74,693 யூனிட்டுகள்ளை விற்பனை செய்து 33.51 சதவீதம் என்ற ஸ்திரமான வளர்ச்சியை பதிவு செய்திருப்பது சிபி சைனுக்கு நிச்சியம் கெட்ட செய்திதான்.

5. டிவிஎஸ் எக்செல் சூப்பர் : ஒரு காலத்தில் விற்பனை யில் கோலோச்சிய மொபட் மாடல்கள் தற்போது மீண்டும் ஆதிக்கம் செய்ய தொடங்கியுள்ளன. ஆம், ஐந்தாவது இடத்தில் உள்ள டிவிஎஸ் எக்செல் சூப்பர் மீண்டும் சிறப்பான விற்பனையை பதிவு செய்துள்ளது. மொத்தம் 75,435 யூனிட்டுகளை விற்று கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட 11,845 யூனிட்டுகள் அல்லது 18.63 சதவிகிதம் உயர்வை பெற்றுள்ளது.

4. ஹீரோ பேஸன் : நான்காவது இடத்தை ஹீரோ பேஸன் மாடல் பிடித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 77,581 யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளது.

3. ஹீரோ HF டீலக்ஸ் : ஹீரோ HF டீலக்ஸ் இந்த மாதமும் அதே மூன்றாம் இடத்தில் தொடர்கிறது. மொத்தம் 127,752 யூனிட்டுகளை விற்பனை செய்து 56.70 சதவீத உயர்வுடன் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

2. ஹீரோ ஸ்பிளெண்டர் : 110சிசி செக்மென்டின் ஆட்டநாயகன் ஹீரோ ஸ்பிளெண்டர் கடந்த மாதம் 229,061 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 47,068 யூனிட்டுகள் அல்லது 25.86 சதவீத உயர்வாகும் கடந்த 2015ஆம் ஆண்டு (181,993) ஆக இருந்தது நினைவு கூறத்தக்கது. மேலும் புதிய ஸ்பிளன்டர் ஐ ஸ்மார்ட் 110சிசியும் விற்பனையில் கைகொடுத்தால் இந்த பண்டிகை காலம் ஹீரோக்கு சரவெடிதான்!

1.ஹோண்டா ஆக்டிவா : ஹோண்டா ஆக்டிவா கடந்த எட்டு மாதங்களாக முதல் இடத்தில் கெட்டியாக அமர்ந்துள்ளது. ஹீரோ ஸ்பிளெண்டரின் கையில் இருந்த முதல் இடம் பறிகொடுக்கப்பட்டு கிட்டத்தட்ட வருடங்களை நெருங்குகிறது. இருப்பினும் தற்போதைக்கு வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. ஸ்கூட்டர்கள் தற்போது மிகக் குறைவான பராமரிப்பு, பல பயன்பாட்டுக்கு ஏற்ற சவுகரியங்கள், போன்றவை ஆக்டிவா மாடலை இந்திய குடும்பங்களின் சிறந்த தேர்வாக மாற்றியுள்ளது. மேலும், இந்த வசதிகள் மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டில் இருந்த இந்திய வாகனச் சந்தையை கைப்பற்றி வெகு நாட்கள் ஆகிவிட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 280,790 யூனிட்டுகளை விற்பனை செய்து 28.91 சதவீத உயர்வுடன் அசைக்க முடியாத உயரத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இதே மாதம் ( 2015: 217,819) யூனிட்டுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.