டாக்ஸியாகவே பயணத்தை முடித்து கொண்ட டாடா இண்டிகா!!!

கடந்த இருபது வருடங்களாக இந்திய குடும்பங்களின் பயணங்களில் முக்கிய அங்கமாக இருந்த டாடா இண்டிகாவின் உற்பத்தியை டாடா நிறுவனம் நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளது.

என்னதான் பார்த்து பழகிப்போன டிசைனாக இருந்தாலும் இந்திய டாக்ஸி மார்க்கெட்டில் முடி சூடா மன்னனாக விளங்கியது இன்டிகா, மற்ற நிறுவனங்கள் கங்ககனம் கட்டிக்கொண்டு போராடியும் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் தனிகாட்டு ராஜாவாக விற்பனையில் சாதித்தது. தற்போது புதிய டிசைன்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட நிலையில் கடந்த ஒரு வருடமாக விற்பனையில் மிகப் பெரிய சரிவை சந்தித்துள்ளது.

டாடா தற்போது நெக்சான் போன்ற அடுத்த தலைமுறை மாடல்களில் கவனத்தை செலுத்த தொடங்கியுள்ளத்தால் இன்டிகா மற்றும் இன்டிகோ ஆகிய இருமாடல்களின் உற்பத்தியை நிறுத்தியதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

1998 ஆம் வருடம் மார்கழி மாதம் டாடா நிறுவனம் இன்டிகா காரை அறிமுகம் செய்தது. நல்ல இடவசதியுடன் முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு சுதேசி காராக விற்பனைக்கு வந்தது. அதுவும் அப்போது விற்பனையில் சக்கை போது போட்டு கொண்டிருந்த மாருதி 800 ஐ விட ஏறத்தாழ 30000 ரூபாய் குறைவான விலையில்.

பிறகு கண்டரியப்பட்ட சில குறைபாடுகளை சரிசெய்து 2001 ஆம் ஆண்டு இன்டிகா V2 மாடல் அறிமுகம் செய்யப்பட்டு அடுத்த சில வருடங்கள் தொடர்ந்து விற்பனையில் முன்னனியில் இருந்தது. இந்தியாவின் முதல் காம்பக்ட் சேடான் மாடலான இன்டிகோ eCS மூலம், 380 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூமுடன் 4 மீட்டர் நீழத்திற்குட்பட்ட காம்பக்ட் சேடான் மார்க்கெட்டை டாடா தான் இந்தியாவிற்கே அறிமுகம் செய்தது.

2013 ஆம் ஆண்டு ஹாரீசோநெக்ஸ்ட்(Horizonext) டிசைன் தாத்பரியத்தின் படி இரு மாடல்கலுமே மேம்படுத்தபட்டு, இறுதிவரை டாக்ஸி மாடல்காளாவே வலம் வந்து தற்போது பயணத்தை முடித்து கொண்டுள்ளன.