ஆல்டோ வாங்குங்க! தோனியை மீட் பண்ணுங்க!!
ஆளாளுக்கு கபாலி பாணியில் கிளம்பி விட்டார்கள் போல இருக்கிறது. சமீபத்தில் தான் மஹிந்திரா சென்ச்சுரோ மிர்ஷியா ஸ்பெசல் எடிசன் பாலிவுட் படத்தின் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது தல தோனியின் வாழ்க்கை படமான M.S.Dhoni -The Untold Story படத்திற்காக ஸ்பெசல் ஏடிசன் கார்களை மாருதி அறிமுகப்படுத்தப்போகிறது. இந்த ஸ்பெசல் எடிசன் மாடல்கள் வரும் அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து கிடைக்கும் என அறிவித்துள்ளது.
இந்த மாடல்களை கேப்டன் கூல் அறிமுகம் செய்து வைத்தார். ஆல்டோ 800 மாடலில் LXI வேரியண்டும், K10 ல் LXI மற்றும் VXI ஆகிய வேரியண்டுகளும் இந்த ஸ்பெசல் எடிசனாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆல்டோ 800 மற்றும் ஆல்டோ கே10 மாடல்கள் கூடுதல் ஆக்சஸரிஸ்களுடன் கிடைக்கும் என்பது சிறப்பம்சம்.
இரண்டு மாடல்களிலுமே இரட்டைவண்ண கலவை கொண்ட இண்டிரியரில் கிடைக்கின்றன. கருப்பு மற்றும் சில்வர், சிவப்பு மற்றும் நீல வண்ண கலவைகளில் கிடைக்கிறது. மேலும் ஸ்டியரிங் கவர்கள், ஆம்பியண்ட் விளக்குகள், கதவில் ஓட்டப்படும் மிதியடிப் பட்டைகள் மற்றும் கார்பெட்டுகள் போன்ற வசதிகள் கூடுதலாக கிடைக்கிறது. பார்கிங் சென்சார்களுக்கான பார் கிராப் டிஸ்பிளே, இன்டிரியர் கார்பன் கலர் தீம்களில் M.S.Dhoni #7 என்ற பெயருடன் கூடிய சீட் கவர்களும் பட்டியலில் அடக்கம்.

கூடுதலாக ஆல்டோ 800 மாடலுக்கும் 1 டின் மியுசிக் ஸிஸ்டம் எம்பி3, USB மற்றும் AUX வசதிகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது. என்ஜின்களில் அநேகமாக எந்தவித மாற்றமும் இல்லாமல் ஆல்டோ 800 0.8லிட்டர் என்ஜினுடனும் கே10 1.௦ லிட்டர் என்ஜினுடனும் கிடைக்கலாம்.
இந்த ஸ்பெசல் எடிசன்கள் விலை சற்று கூடுதலாகியுள்ளது. ஆல்டோ 800 ரூ 12,777 அதிகமாகவும் ஆல்டோ கே10 ரூ 16,777 அதிகமாகவும் இருக்கும். வரும் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து இந்தியா முழுவதும் அனைத்து டீலர்ஷிப்களிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக மாருதி நிறுவனம் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டரில் #DrivenByPassion என்ற போட்டியை நடத்துகிறது .வெற்றி பெறுபவர்கள் படத்தை பார்க்கும் வாய்ப்போடு ‘தல’ தோனியை பார்க்கும் வாய்ப்பையும் பெறலாம்.
